Saturday, November 9, 2013

10, +2ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதியிலேயே டி.சி கொடுக்கிறாங்களா? புகார் பண்ணுங்க!

னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பள்ளிகள் அவ்வாறு வற்புறுத்தினால் பெற்றோர்கள் இ-மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களை கல்வியாண்டின் இடையில் பெற்றோர்களின் விருப்பமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்கி தனித்தேர்வர்களாக அவர்களை பொதுத்தேர்வு எழுத வலியுறுத்தக்கூடாது என ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலமாகவும், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் கூட்டங்களிலும் பள்ளி மாணவர்களை எந்தக் காரணத்தாலும் தனித்தேர்வர் என விண்ணப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனியார் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்தால் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுமாறு மெட்ரிக் பள்ளிகள் வற்புறுத்துவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு இ-மெயில் மூலம் புகார்கள் வருகின்றன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் இடையில் பெற்றோர் விருப்பமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கூடாது. இந்த மாணவர்களை எந்தக் காரணம் கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணிப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக்கூடாது.
இந்த விதிகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம். இதில் ஏதேனும் விதிமீறல்கள் இருக்கும் என்றால் கீழ்க்கப்பட்ட இ-மெயில் முகவரியிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம்.
இ-மெயில் முகவரி: dmschennai2010@gmail.com,
எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டிய செல்போன் எண்கள்: 94421-44401, 94435-74633. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் இன்சூரன்ஸ் பற்றி நாம் அறிய வேண்டியவை!!

சாலை வழிப் பயணம் என்பது ஆபத்துகள் நிறைந்தவையாகும். ஒரு விபத்து உயிர்களை பலி கொள்வதோடு, குடும்பங்களையும் நொடியில் சிதைத்து விடுகிறது. அது போன்ற ஒரு துயர நிகழ்வின் போது, தேவைப்படக்கூடிய நிதியுதவியை உடனடியாக வழங்கி உதவக்கூடியது இன்சூரன்ஸ். மோட்டார் இன்சூரன்ஸின் சில வடிவங்கள் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எனவே, மோட்டார் இன்சூரன்ஸ் பற்றி அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
செய்ய வேண்டியவை:
* இது போன்ற பாலிஸிகளை யார் மூலமும் வாங்கிக் கொள்ளலாம் என்றும், உங்கள் வாகன டீலர் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று எவ்வித நிபந்தனையும் கிடையாது என்றும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் வாகன டீலர் மூலம் இன்சூரன்ஸுக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், விண்ணப்பப் படிவத்தை நீங்களே நிரப்பவும்.
* விண்ணப்பப் படிவத்தை மிகவும் கவனமாகவும், முழுமையாகவும், உண்மையான தகவல்களின் அடிப்படையிலும் நிரப்புங்கள்.
* பரஸ்பர ஒப்புதலுக்குப் பின் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் நகல் ஒன்றை பத்திரமாக ஆவணப்படுத்திக் கொள்ளுங்கள்.
* பாலிஸி பற்றிய தகவல் தொகுப்பேட்டை கவனமாகப் படித்துப் பார்த்து, அந்த இன்சூரன்ஸுக்குள் அடங்கக்கூடியவை எவை, அடங்காதவை எவை என்பது பற்றி தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
* இதில் கூடுதலாகப் பெறக்கூடிய பாதுகாப்பு பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொண்டு, அவற்றில் எது உங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்
* ஆர்சி புத்தகம், பெர்மிட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை சரிபார்ப்புக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பியுங்கள்.
* இந்த ஆவணங்கள் அனைத்தையும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமானது.
செய்யக்கூடாதவை:
* உங்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேறு யாரையும் அனுமதிக்காதீர்கள்.
* படிவத்தில் எந்த கட்டத்தையும் நிரப்பாமல் வெறுமையாக விட வேண்டாம்
* உங்கள் பாலிஸியை இடைவெளி விடாது உரிய நேரத்தில் புதுப்பித்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
* ஏற்கெனவே லைசென்ஸ் எடுக்கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்ட காரை வாங்கும் போது, சரியான நடைமுறை என்ன என்பது பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
* நீங்கள் இன்சூர் செய்யும் வாகனத்தின் உபயோகத்தைப் பற்றிய பொய்யான தகவல்களைக் கொடுப்பது தவறான செயல்.